PAN Card என்றால் என்ன?

பான் என்றால் என்ன?

Permanent Account Number என்பதன் சுருக்கமே PAN ஆகும். தமிழில் இதன் பெயர் "நிரந்தர கணக்கு அட்டை". இக் கார்டினை வழங்குவது, இந்திய மத்திய அரசின் வருமான வரித்துறை (Income Tax Department) ஆகும். பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும், அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பார்போம்.




பான் கார்டில் ஒரு 10 இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுவே, பான் எண் (PAN Number) ஆகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம்.

பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும்.

பான் கார்டின் முக்கியத்துவம்

1. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய DEMAT Account என்ற கணக்கு துவங்க வேண்டும். இதற்கு PAN Card வேண்டும்.

2. மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்தால் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.

3. ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் பணம் எடுக்கும் போது பான்கார்டு அவசியம்.

4. ரூ.5 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது PAN Card வேண்டும்.

5. கார் வாங்கும் போது அல்லது விற்பனையின் போது இது வேண்டும்.

6. அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.50,000 தாண்டும் போது அவசியம்.

7. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் (Cheque) மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.

8. வருமான வரி ரிட்டன் (Income Tax Return) தாக்கல் செய்ய அவசியம்.

9. சேவை வரி மற்றும் வணிகவரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள

பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும்.

1. முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண் அமைப்போடு இருக்கும். 

2. அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும். இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். 

3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: 

C - குழுமம் (கம்பெனி) 

P - தனி நபர் 

H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) F - நிறுவனம் 

A - தனி நபர்களின் இணக்கம் (AOP) 

T - அறக்கட்டளை 

B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) 

L - லோக்கல் அதாரிட்டி 

J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் 

G - அரசாங்கம் 

(உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;).

4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்: 

a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது 

b) மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம் போன்றவற்றின் முதல் எழுத்து. 

(உதாரணத்திற்கு - குமார் [தனிநபர்] = AAAPC4444A; குமார் [HUF] = AAAHL4444A; பொது நிறுவனம் = AAAFG4444A) 

5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள். 

6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த 
சரிபார்ப்பு இலக்கம்.

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?


பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.inwww.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
வாழ்விடத்திற்கான சான்றுகள்
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

 ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. இது சட்டவிரோதம். 

0 Comments