கொரோனா தடுப்பூசி - COVAXIN

கொரோனா வைரஸ், மக்கள் தொகையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸை ஒழிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பலனாக பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது.

பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தற்போது முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து, அடுத்த கட்டமாக மனிதர்களிடையே பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் எனும் இந்த மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா ஹெல்லா தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் என்பதும், ஆரம்ப நாட்களில் ‘பேயர்’ ரசாயன கம்பெனியில் விவசாய பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், தனது அமெரிக்க வேலையை உதறிவிட்டு, ஹைதராபாதில் பாரத் பயோ டெக் என்ற பெயரில் புதிதாக மருந்து கம்பெனி தொடங்கினார், ஹெப்பாடிட்டீஸ் தடுப்பூசி தயாரித்துவந்த இந்த நிறுவனம், ஜிகா வைரஸ்க்கான தடுப்பூசியை உலகில் முதல் முதலில் கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது, இது தவிர பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் இந்த நிறுவனம் தயாரித்துவருகிறது.

தற்போது, கொரோனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியையும் தயாரித்து, மனிதர்களிடையே சோதனை நடத்த அனுமதி பெற்ற நிலையில், இந்த மருந்தை, இந்நிறுவனத்தின் துணை தலைவர் மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ் தனது உடலில் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டார். இவரது தன்னம்பிக்கை அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

பரிசோதனையின் முடிவில் இந்த மருந்தை இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15 அன்று விற்பனைக்கு கொண்டுவர இந்த நிறுவனமும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து திட்டமிட்டுள்ளது. 

இருப்பினும், இந்த தடுப்பூசி சோதனையில் ஈடுபடும் மருத்துவர்களின் கருத்து இதிலிருந்து வேறுபட்டது. மனித சோதனைகள் தொடங்க குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகலாம். வழக்கமாக சோதனை முடிவடைய 6 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த தடுப்பூசி எந்த வேகத்தில் இயங்குகிறது என்பதைப் பொறுத்து, இந்த தடுப்பூசியின் சோதனைகளை விரைவாகச் சமாளிக்க முடியும். ஆயினும்கூட, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசியைத் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கைகள் தொடர்கிறது. ஒருவேளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசி குறித்து கொள்கையளவில் ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் எனத் தெரிகிறது. ஆனால் தடுப்பூசி சந்தைக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். இந்த நேரம் குறைந்தது 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர் - ICMR) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் உட்பட நாட்டின் 13 மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளை (Clinical Trials) விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மட்டுமே கொரோனா மருந்து சோதனைக்கான அனுமதி பெற்றுள்ளது.

அதன்படி,  விசாகப்பட்டினம், ரோஹ்தக், புது தில்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் (தமிழ்நாடு), ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ள நிறுவனங்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்து சந்தைக்கு வரும் போது, சீன பொருட்களை கைகழுவி இந்தியா தனது தற்சார்பு கொள்கையில் பெருமை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

Comments

Popular posts from this blog

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்

ஆரணி வரலாறு

Earn money using cryptocurrency