ஆரணி வரலாறு
சோழர்களை தொடர்ந்து விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணியை அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரணியில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த போது தசரா விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சியின் போது விஜயநகர கூட்டரசு தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவர்களின் ஆட்சிப்பகுதி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வரை பரவியிருந்த்து. குறுகிய காலமே இவர்கள் ஆட்சி செய்திருந்தாலும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றனர். இவர்கள் ஆண்ட பகுதியான படைவீட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கோட்டைகள், கோயில்கள், நாணயங்கள், நகை ஆபரணங்கள் ஆகியன கிடைத்துள்ளன.இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி, படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்தது.
விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. இந்தப் போரிணை இரண்டாம் கர்நாடகப் போர் அல்லது ஆரணி சண்டை என்று அழைக்கப்படுகிறது.
1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார்.அங்கு அவர் கூடப்ஷாகீப்பை சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து) மற்ற வெற்றிகளை பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாகீ மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாகீப் அவனது பணம்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றை பெற்ற சிவாஜியின் படை 1677 மார்ஷல் கர்னல், கடப்பா,மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கி படையெடுத்தது.
செஞ்சி, வேலூரை வெற்றிகொண்டபிறகு தஞ்சையையும் கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதை கொடுக்க அவன் தயாராக இல்லை. சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் உத்தரவை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவனின் சேவைக்கு விருதாக ஆரணி நகரை பரிசாக அளித்தான் வீர சிவாஜி. அதன் பிறகு ஆரணியை ஆட்சி செய்து ஆரணியின் ஜாகிர் என்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது இவர் ஆரணியை 1601 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.
நடுக்காட்டில் அரண்மணை
ஆரணியிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு புறமாக சென்றால் பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் அதாவது ஆரணியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இங்கு ஒரு ஜாகீர் காலத்து அரண்மனை ஆகும். ஐந்தாவது ஜாகீர் திருமலை சாகிப் அங்கு அவரது காதலிக்காக கட்டிய அரண்மனை பங்களா இங்கு அமைந்துள்ளது. இவர் ஒரு ஆங்கிலேய பெண்ணின் மீது கொண்ட காதலால் தனி பங்களாவை கட்டி அங்கு வாழ்ந்து வந்தார். இந்த சத்திய விஜயநகரின் ஒரு அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் எனுமிடத்தில் தனித்த நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்கு செல்ல மூன்று இடங்களில் படிகள் அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரத்தில் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
பிரஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது பூசிமலைக்குப்பம் காட்டில் தனித்து நிற்கிறது.பிரெஞ்சு கட்டிடக்கலை என்றால் என்னால் ஒரு தொழில்முறை கருத்தைப் பெற முடியவில்லை, இருப்பினும் இது பல பிரெஞ்சு கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருக்கலாம். இந்த அரண்மனை பூசிமலைக்குப்பம் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் மற்றும் பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படும் ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதற்கான சான்றுகளும் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும்.
ஆரணி கோட்டை
அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது.
தற்போது, அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன.
பின்னாட்களில் வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது ஆரணி தாலுகாவின் தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் ஒழிப்பு 1948 ல் நிறைவேற்றப்பட்டும் வரை ஜாகிர் பாஸ்கர் பந்த் வழிவந்தோரால் தலைமையில் ஆரணி நகரம் ஆட்சி தொடர்ந்தது.
இந்திய விடுதலைக்கு பிறகு வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக மாறியது. அதன் பின்னர் வட ஆற்காடு மாவட்டம் தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட மறுசீரமைப்புக்கு உட்பட்டது. அதன்படி வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் என இரண்டாக 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த ஆரணி பகுதியை திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்
புத்திரகாமேஷ்டி யாகம், என்பது குழந்தைப் பேறு வேண்டி செய்யப்படும் யாகம் ஆகும். இது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் யாகங்களில் ஒன்றாகும். இந்த யாகத்தின் செய்தால், அதன் பலனாக குழந்தை பேரு கிடைக்கும் நம்பிக்கை. இந்து சமய புராணமான இராமாயணத்தில் இதைப் பற்றிய குறிப்பு உண்டு.இராமனின் தந்தையான தசரதர் குழந்தைப் பேறின்றி இருந்த போது, இந்த யாகத்தை நடத்தி, ராமர் உள்ளிட்ட நான்கு குழந்தைகளைப் பெற்றார் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தற்காலத்தில் இந்த யாகத்தினை பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் செய்வதில்லை. இந்து சமய கோயில்களில் மகா புத்ர காமேஷ்டி ஹோமம் செய்கின்றார்கள். இதில் இதில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்திடத் தடையாக உள்ள பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட பிற தோஷங்கள் நீங்கிடவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றார்கள்.
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.
அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.
ஒரு முறை ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தில் இருந்து கீழே சிதறிய நீர், ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதி ஆனது. இந்த நதியின் கரையில்தான் புத்திரகாமேட்டீஸ்வரரின் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரில் மட்டும், நதி வடக்கில் இருந்து கிழக்காகத் திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதியாகிவிட்டது.
இந்தத் தலத்தில், மூலவர் புத்திர காமேட்டீஸ்வரர், உற்ஸவர் சோமாஸ்கந்தர், அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி. இங்கே கருவறையில் படமெடுத்தாடும் ஒன்பது தலை நாகம் குடையாகப் பிடித்திருக்க அதன் அடியில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் திருக்காட்சி அளிக்கிறார். இங்கே பெருமானுக்கு பெüர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி புறப்பாடு கண்டருள்கிறார்.
அம்பாள் பெரியநாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதி தனி கொடிமரத்துடன் திகழ்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் தசரத மன்னருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே தசரதர், சக்ரவர்த்தி அலங்காரத்தில் இல்லாமல், யாகம் செய்யும் எளிய கோலத்தில் கைகளில் ருத்திராட்ச மாலை, கமண்டலம் ஆகியவற்றோடு முனிவர் போல் காட்சி தருகிறார். உற்ஸவ நாட்களில் இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
குழந்தை பாக்கியம் பெற: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் வருத்தம் கொண்டவர்கள், இங்கே புத்திர காமேட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட, விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தசரதச் சக்ரவர்த்தியே யாகம் செய்து புத்திர பாக்கியம் பெற்றார் என்பதால், இந்தத் தலத்தின் இறைவன் குழந்தை பாக்கியம் அருளும் ஈசனாகத் திகழ்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கான சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசையுடனும் வேண்டுதலுடனும், ஏழு திங்கள் கிழமைகள் விரதம் இருக்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் ஆறு வாரங்களுக்கும் குழந்தைகளுக்கு அன்னம் அளித்து, விரதம் இருந்து பின்னர் தாங்கள் அன்னம் உண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பின்னர் ஏழாவது வார திங்கள் கிழமையில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளிப் பூ சாற்றி, கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.
ஆனி மாத பெளர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு 11 சிவாச்சாரியர்கள், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றனர். இதிலும் அன்பர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
ஜாதகத்தில் புத்திர பாக்கிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் என இருந்து தோஷம் ஏற்பட்டால், அந்த தோஷத்தினைப் போக்க, கோயிலில் உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.
இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.
கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன.
ஸ்வாமி: ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்
அம்பாள்: ஸ்ரீபெரிய நாயகி
தலவிருட்சம்: பவளமல்லி
திருத்தலச் சிறப்பு: ஜமதக்னி முனிவர் உருவாக்கிய கமண்டல நதி பாயும் தலம்; பிள்ளை வரம் வேண்டி தசரதர் யாகம் செய்த திருத்தலம்.
சிறப்பு வழிபாடு: இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை தரிசிப்பதுடன், தொடர்ந்து ஆறு திங்கட் கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
|
---|
பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் – இராணிப்பேட்டை சாலையில் உள்ள ஆற்காடு, சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் சேத்துப்பட்டு, செஞ்சி மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை எண்-4 ஆரணி வழியாக செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்-132 மூலம் வேலூர், திருப்பதி, சித்தூர், பெங்களூர் மற்றும் வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரியையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்-133 மூலம் போளூர், செங்கம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருக்கோவிலூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
- மாநில நெடுஞ்சாலைகள் SH4 : இராணிப்பேட்டை நகரம் – ஆற்காடு நகரம் – திமிரி - ஆரணி நகரம் - சேத்துப்பட்டு - வளத்தி - செஞ்சி - விழுப்புரம் நகரம்
- தேசிய நெடுஞ்சாலை NH132 : திருப்பதி நகரம் - சித்தூர் – வேலூர் மாநகரம் - கண்ணமங்கலம் - ஆரணி நகரம்
- மாநில நெடுஞ்சாலை SH43 : ஆரணி நகரம் - பெரணமல்லூர் கூட்ரோடு – வந்தவாசி நகரம் – தெள்ளார் – திண்டிவனம் நகரம்
- மாநில நெடுஞ்சாலை SH5A : காஞ்சிபுரம் நகரம் – மாங்கால் கூட்ரோடு – திருவத்திபுரம் மாம்பாக்கம் – ச.வி.நகரம் - ஆரணி நகரம்
- மாவட்ட நெடுஞ்சாலை MH40 : ஆரணி நகரம் – தச்சூர் – தேவிகாபுரம்
- மாவட்ட நெடுஞ்சாலை MH741 : ஆரணி நகரம் – நடுக்குப்பம் – சந்தவாசல் – படவேடு
- மாவட்ட நெடுஞ்சாலை : ஆரணி நகரம் - வாழைப்பந்தல்
- மாநில நெடுஞ்சாலை SH133 : ஆரணி நகரம் – களம்பூர் – வடமாதிமங்கலம் - எட்டிவாடி – போளூர் – வில்வாரணி - புதுப்பாளையம் – செங்கம் சாலை
- மாநில நெடுஞ்சாலை SH234A : ஆரணி நகரம் - களம்பூர் – எட்டிவாடி – போளூர் – கலசப்பாக்கம் – திருவண்ணாமலை மாநகரம் - காஞ்சி – தண்டராம்பட்டு – அரூர் – பாப்பிரெட்டிப்பட்டி – சேலம் மாநகரம்
ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன. ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை, காஞ்சிபுரம் சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
Comments
Post a Comment